ஸத்யவிரத க்ஷேத்திரமான திருக்கச்சியில் பகவான் தரிசனத்திற்காக பிரம்மா, சரஸ்வதி இல்லாமல் தனியே வேள்வி செய்ய, கோபமுற்ற சரஸ்வதி, வேகவதி நதியாக பெருக்கெடுத்து வந்து யாகத்திற்கு தடைசெய்ய பல வழிகளில் முயன்றாள். அதனால் கோபம் கொண்ட திருமால் பவளம் போல் சிவந்த மேனியாக காட்சி தந்தருளியதால் 'பவளவண்ணம்' என்ற பெயர் பெற்றதாகக் கூறப்படுகிறது.
மூலவர் பவளவண்ணன் என்ற திருநாமத்துடன் நின்றத் திருக்கோலம், மேற்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். தாயாருக்கு பவளவல்லி நாச்சியார் என்பது திருநாமம். அஸ்வினி தேவதைகள், பார்வதி ஆகியோருக்கு பகவான் பிரத்யக்ஷம்.
இக்கோயிலுக்கு எதிர்த் தெருவில் சுமார் அரை கி.மீ. தொலைவில் பச்சைவண்ணன் பெருமாள் கோயில் உள்ளது. இந்த ஸ்தலத்தை ஆழ்வார் பாடவில்லையென்றாலும், இரண்டு க்ஷேத்திரங்களையும் ஒரே திவ்யதேசமாக சேர்த்தே ஸேவிப்பது வழக்கமாக இருக்கிறது.
மூலவர் பச்சைவண்ணன், ஆதிசேஷன் மீது வீற்றிருந்த திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். உற்சவர் திருநாமம் சீனிவாசன். தாயார் மரகதவல்லி நாச்சியார். பிருகு முனிவருக்கு பகவான் பிரத்யக்ஷம்.
திருமங்கையாழ்வார் ஒரு பாசுரம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|